;
Athirady Tamil News

வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் – அநுரகுமார!!

0

மக்களாணை உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தயார்.பொருளாதாரத்தை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் சுகபோகமாக இருந்துக் கொண்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுகையில்,நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி விதிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

வரி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரிசி தேவைக்கு மேலதிகமாக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இருப்பினும் 2022 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.மேலதிகமாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அரிசி மேலதிகமாக உள்ளது.

வரி தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.தவறான பொருளாதார கொள்கையின் பிரதிபலனை நாடும் நாட்டு மக்களும் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.

பெறுமதி சேர் வரி 15 சதவீதமாகவும்,சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை 2.5 சதவீதமாகவும்,கம்பனிகளுக்கான வரி,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி 30 சதவீதமாகவும்,வங்கி கடன் வட்டி 30 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பது நியாயமற்றது.பொருளாதார பாதிப்பின் சுமை மக்கள் மீது மோசமாக சுமத்தப்படும் போது பொருளாதார நெருக்கடியை உருவாக்கியவர்கள் பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுகிறார்கள்.

இலங்கையின் பொருளாதார குற்றவாளிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார குற்றவாளிகள் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவிக்கும் போது மக்கள் மீது வரி சுமையை சுமத்துவது நியாயமற்றது.

பொருளாதார பாதிப்பை தொடர்ந்து மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதமளவில் 470 மருத்துவர்கள்,500 வங்கி துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

பிற நாடுகளில் தமது தொழிற்துறைக்கு அதிக கேள்வி உள்ள நிலையில் அவர்கள் தமது நாட்டுக்காக குறைந்த வருமானத்தில் சேவையாற்றுகிறார்கள்.

வரி அதிகரிப்பினால் நாட்டின் தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்,தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

பொருளாதார குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கும் போது நாட்டுக்காக குறைந்த வருமானத்தில் சேவையாற்றிய தொழிற்துறையினர் மீது வரி சுமத்துவது மக்கள் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வங்கி கடன் வரி வீதம் அதிகரிப்பு,மின்கட்டணம் அதிகரிப்பு,மூல பொருட்கள் விலையேற்றத்தினால் நாட்டின் குடிசை கைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,ஆகவே வரி தொடர்பிலான கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா,அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.