ஓராண்டில் 46% அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு – ஆக்ஸ்ஃபேம் அறிக்கை என்ன சொல்கிறது?!!
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவீதம் குவிந்து கிடப்பதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது.
2020ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த பில்லினியர்கள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 166 ஆக அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், சமூகத்தில் அடித்தட்டில் வசிக்கும் ஏழைகளால் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியவில்லை என்று அது மேலும் கூறுகிறது.
இந்த பட்டவர்த்தமான பாகுபாட்டைக் களைய கோடீஸ்வரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொண்டு நிறுவனம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கிய உலக பொருளாதார சபையில், ‘செல்வந்தர்களின் வாழ்க்கை’ குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வளங்கள் பங்கீட்டில் பெருமளவு சமத்துவமின்மை நிலவுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட செல்வ வளம் வெறும் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சென்று சேர்ந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பணக்காரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 46 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 660 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
2022ஆம் ஆண்டு உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்வந்தராக அதானி உருவெடுத்தார் என்று ப்ளூம்பெர்க் இதழ் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் உலகம் முழுவதும் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்த செல்வந்தர் வரிசையில் அவரே முதலிடம் பிடித்திருந்தார்.
அதேநேரத்தில், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது பணக்காரர்களைக் காட்டிலும் அதிக வரி விதிக்கப்பட்டதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அடித்தட்டில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் இருந்தே சுமார் 64 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுவதாகவும், முதல் 10 சதவீத பணக்காரர்களிடம் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே கிடைப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
“துரதிர்ஷ்டவசமாக இந்தியா பணக்காரர்களுக்கு மட்டுமேயான நாடாக மாறுவதற்கான பாதையில் விரைகிறது” என்று ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறினார்.
“பணக்காரர்களின் வாழ்க்கையை உறுதி செய்யும் கட்டமைப்பால், விளிம்பு நிலையில் தவிக்கும் பட்டியல் பிரிவினர், ஆதிவாசிகள், முஸ்லீம்கள், பெண்கள் மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்,” என்கிறார் அவர்.
தற்போது கார்ப்பரேட் வரிகள் குறைப்பு, வரி விலக்குகள் மற்றும் பிற சலுகைகளால் பணக்காரர்கள் பயனடைகிறார்கள் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய, வரவிருக்கும் பட்ஜெட்டில் பணக்காரர்கள் மீதான செல்வ வரி போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துகளுக்கும் 2% வரி விதித்தால், நாடு முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடால் வாடும் மக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊட்டம் அளிக்க முடியும் என்று ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறியுள்ளது.
1% செல்வ வரி விதித்தால், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு தாராளமாக நிதி வழங்க முடியும்.
இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களுக்கு 2.5% வரி அல்லது முதல் 10 கோடீஸ்வரர்களுக்கு 5% வரி விதித்தால் 15 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரத் தேவையான முழுத் தொகையையும் ஏறக்குறைய ஈடுசெய்யலாம் என்றும் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்துள்ளது.
“சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், ஜனநாயகத்தை உயிர்ப்பிப்பதற்கும்” பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பது அவசியம்” என்று ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குனர் கேப்ரியேலா புச்சர் கூறியுள்ளார்.