சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!
நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம்.
எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபாவினை மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக செலவிட முடியுமல்லவா என்று சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும்.
அதற்கமைய தமது நாட்டின் சுதந்திர தினத்தன்று ஏனைய நாடுகளிலுள்ள தூதரங்களிலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று இலங்கையிலுள்ள ஏனைய நாடுகளின் தூதரகங்களிலும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்.
நாடு தொடர்பில் முழு உலகின் கவனமும் ஈர்க்கப்படும் நாள் அந்நாட்டின் தேசிய தினமாகும். அதற்கமையவே இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றில் மின் விநியோகத்தை துண்டிக்காமலிருப்பதற்கு 357 மில்லியன் ரூபா தேவையாகும். எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களை இரத்து செய்தால் அதன் மூலம் மிகக் குறைவான பணமே மீதப்படுத்தப்படும்.
எமக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் இந்நாளை நாட்டினதும் , மக்களினதும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தும் நாளாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எமது அரசியல் ரீதியிலான சுதந்திரம் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், கடந்த 45 ஆண்டுகளாக பொருளாதார சுதந்திரம் கிடைக்கப் பெறவில்லை.
அதன் காரணமாகவே இன்று இந்தளவிற்கு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. எனவே பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களை அவசியமற்றதாகக் கருத வேண்டாம் என்றார்.