50-ஆண்டுகளில் மிக மோசம்: சீன பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக சரிவு!!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது.
இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும். 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்.) இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவு ஆகும். இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவைக் கண்டிருப்பதற்கு காரணம், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும், பொதுமுடக்கமும்தான். சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.