சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு !!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதற்காக கோவில் நடை நவம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதன்பின்பு கோவில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை கடந்த 14-ந் தேதி நடந்தது.
இந்த இரண்டு சீசன்களிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் முடிந்ததை தொடர்ந்து இன்று கோவிலில் நெய் அபிஷேகம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நாளை இரவு 10 மணிக்கு மாளிகைபுரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதன்பிறகு மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ந் தேதி நடை திறக்கப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தே வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கூறியி ருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கையை கோவில் நிர்வாகம் அவ்வப்போது அறிவித்து வந்தது.
அதன்படி மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் மட்டும் நேற்று முன்தினம் வரை கோவிலுக்கு 48 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இன்றும், நாளையும் ஐயப்பனை தரிசிக்க சுமார் 2 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு மட்டும் சபரிமலை வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.