கவர்னர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல: அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!!
டெல்லி சட்டசபையின் 3 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-ம் நாளையொட்டி, டெல்லி அரசு நிர்வாகத்தில் கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அடிஷி கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்தார். அதன் மீது நடந்த விவாதத்தில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் சக்சேனாவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:- கவர்னர் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்?. அவர் நமது தலை மீது அமர்ந்துள்ளார். எனது வீட்டுப்பாடங்களை எனது ஆசிரியர் கூட இந்த அளவுக்கு ஆய்வு செய்ததில்லை.
அந்த அளவுக்கு எனது கோப்புகளை அவர் ஆய்வு செய்கிறார். அவர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல. என்னை முதல்-மந்திரியாக தேர்வு செய்தது, மக்கள்தான். கவர்னர் சக்சேனா, பண்ணையார் மனநிலை கொண்டவர். அதனால்தான், ஏழை குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதை அவர் தடுக்கிறார். நமது குழந்தைகளை எங்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர் யார்? பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் படித்துள்ளனர்.
கவர்னரை போன்றவர்களால்தான் நாடு பின்தங்கி இருக்கிறது. ஒருமுறை சந்தித்தபோது, கவர்னர் என்னிடம் சொன்னார். தன்னால்தான் டெல்லி மாநகராட்சி தேர்தலில் 104 வார்டுகளை பா.ஜனதா கைப்பற்றியதாக தெரிவித்தார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றும் என்றும் கூறினார். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாளை நாங்களே கூட மத்தியில் ஆட்சிக்கு வரலாம்.
போலீஸ், நிலம், பொது ஒழுங்கு ஆகியவற்றை தவிர இதர விவகாரங்களில் கவர்னர் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கவன ஈர்ப்பு தீர்மானம் மீது ஆம் ஆத்மி உறுப்பினர் அடிஷி பேசியதாவது:- ஆசிரியர்கள் பின்லாந்தில் பயிற்சி பெறக்கூடாது என்று கவர்னர் உத்தரவிட்டது சட்டவிரோதமானது. அவர் சொந்தமாக முடிவெடுக்கக்கூடாது. அவர் அரசியல் சட்ட பதவி வகிக்கிறார். பா.ஜனதாவின் ஏஜெண்டு அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
ஊழலை கண்டித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடையும், தலைப்பாகையும் அணிந்து வந்திருந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்த்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால், அஜய் மகாவர், ஜிதேந்திர மகாஜன், ஓ.பி.சர்மா, அபய் வர்மா, அனில் பாஜ்பாய் ஆகிய 5 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஒருநாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.