சிட்னி விமான நிலையத்தில் என்ஜின் பழுதடைந்த விமானம் பத்திரமாக தரை இறங்கியது- பீதியில் தவித்த பயணிகள்!!
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து குவாண்டஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. போயிங் 737-800 ரக விமானமான அதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே டாஸ்மான் கடல் பகுதி மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது என்ஜினில் பழுது ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
இரட்டை என்ஜினில் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. விமானிகள் உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பில் இருப்பதற்கான எச்சரிக்கையை கொடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க வந்தது.
இதையடுத்து அங்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் தவித்தபடி இருந்தனர். ஒரு என்ஜினில் விமானத்தை இயக்கிய விமானிகள் அதை சிட்னி விமான நிலையத்தில் தரை இறக்கினர்.அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரை இறங்கியது. இதனால் பயணிகள், அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதன் மூலம் சில மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.