காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு!!
போர் நடவடிக்கையால் துன்பம், வறுமைதான் மிஞ்சும். எனவே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேசி அதற்குரிய தீர்வுகளை காணவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக “அல் அரேபியா” டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது.
இந்தியாவுடன் மூன்று முறை போரிட்டு பாகிஸ்தான் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டுவிட்டது. போர் நடவடிக்கையால் துன்பம், வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதனை நாங்கள் ஏற்கெனவே உணர்ந்துள்ளோம்.
அமைதியான முறையில் வாழ்ந்து முன்னேற்றம் காண்பதா அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது நமது கைகளில்தான் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ஆயுத தளவாடங்கள் உள்ளன. எனவே, இரு நாடுகளுக்கு இடையிலும் போர் ஏற்பட்டால் அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருதரப்பிலும் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. மேலும், ஆயுதங்கள் தயாரிப்பதில் வளங்களை வீணாக்குவதில் பாகிஸ்தானுக்கு உடன்பாடில்லை.
பல்வேறு சிக்கல்கள் இருப்பதை கருத்தில் கொண்டு காஷ்மீர் உள்ளிட்ட இருநாடுகளுக்கிடையில் இருக்கும் தீவிரமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு, பிரதமர் மோடி முன்வர வேண்டும்.
பாகிஸ்தானை பொறுத்தவரையில், இந்தியாவுடன் சுமூக உறவை பேணி நிம்மதியாகவும், அமைதியுடனும் வாழவே விரும்புகிறது. ஆனால், காஷ்மீரில் தற்போது கடைபிடித்து வரும் செயல்பாடுகளை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் பேட்டியில் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்கைக்கு தேவையான கோதுமை மாவு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடி அதிகரித்துள்ள சூழ்நிலையில், இந்தியாவுடன் சுமூக உறவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் தீவிரம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளில் பணவீக்கம், உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். நெடுஞ்சாலைகளை மறித்து டயர்களை எரித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் ஆயூப் மிர்சா கூறியது:
பொதுமக்களுக்கு மானிய விலையில் கோதுமை வழங்கும் அரசு கிடங்குகள் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பூட்டப்பட்டுள்ளன. அரசு கொள்கைகளின் தொடர் தோல்வியால் கோதுமை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், ஏழை மக்கள் தங்கள் அன்றாட பசியை போக்க வழிதெரியாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசு எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்ய மக்கள் முடிவெடுத்துள்ளனர். இதேபோன்ற நிலைதான், கில்ஜித் பல்டிஸ்தானிலும் காணப்படுகிறது. அங்கு அரசின் நிலைப்பாடுகளால் வணிகமும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்துபோயுள்ளது. இவ்வாறு அயூப் தெரிவித்தார்.