என்னை விமர்சிப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு தார்மீக உரிமை கிடையாது – மைத்திரிபால!!
புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக் கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை. உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள்.
இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத சரத் பொன்சேகாவிற்கு என்னை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டார்.
புறக்கோட்டை அரசமரத்தடியில் யாசகம் பெற வேண்டியவரை அரச தலைவாக்கினால் இந்த நிலை தான் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகா ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.
10 கோடி ரூபாவை திரட்டிக் கொள்ள புறக்கோட்டை அரசமரத்தடியில் யாசகம் பெற வேண்டுமா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட கருத்தை மேற்கோற்காட்டி புறக்கோட்டை அரச மரத்தடியில் யாசகம் பெற வேண்டியவரை அரச தலைவராக்கினால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்றார்.
இதன்போது குறுக்கிட்டு எழுந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக்கொள்வேன்,ஏனெனில் 10 கோடி ரூபா நிதி என்னிடம் இல்லை. என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முன்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலில் தெளிவாக படியுங்கள்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் எனக்கு தெரிவிக்கவில்லை,என உயர்நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.10 கோடி ரூபா நட்டஈடே தவிர தண்டபணம் அல்ல என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சரத் பொன்சேகா சிறையில் இருந்த போது நான் தான் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி,பீல்ட் மார்ஷல் பதவி நிலை உயர்வு வழங்கினேன் இவ்வாறான பின்னணியின் என்மீது கடுமையான குற்றச்சாட்டுள்ளளை முன்வைப்பது நியாயமற்றது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் என்னை சிறைப்படுத்த வேண்டும் என சரத் பொன்சேகா உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த போது இராணுவ தலைமையகத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அவ்வாறாயின் அவர் பொறுப்புக் கூற வேண்டும்.
தனது கண்ணை பாதுகாத்துக் கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். தனது உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாத தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் என்னை விமர்சிக்க சரத் பொன்சேகாவிற்கு தார்மீக உரிமை கிடையாது என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலை செய்தமை, பதவி நிலை உயர்வு வழங்கியதை ஏற்றுக்கொள்கிறேன், மறுக்கவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தில் 100 பிரசார கூட்டங்களில் கலந்துக் கொண்டேன், தேர்தல்காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
அரசியலமைப்பிற்கு முரணாக நியமிக்கப்பட்ட 52 நாள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததால் எனது அமைச்சு பதவி பறித்ததை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்து விட்டார்.
இராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்டார். அக்காலப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு தரப்பினரது எண்ணிக்கை 200 ஆக குறைக்கப்பட்டது, அத்துடன் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன இவ்வாறான பின்னணியில் தான் இராணுவ தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது காலையில் இருந்து இரவு 09 மணிவரை சிங்கப்பூர் நாட்டில் இருந்து இலங்கைக்கு இரண்டு பயணிகள் விமானங்கள் வருகை தந்தன.
ஆனால் நாடு இடுகாடாக மாறியுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன இரவு 12 மணிக்கு முதல் வகுப்பு ஆசனத்தில் இலங்கைக்கு வந்தடைந்தார். இவ்விடயம் தொடர்பில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவின் போது விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளேன் என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றுகையில், உலக இராணுவ கோட்பாடுகளுக்கு அமைய 10 இலட்சம் இராணுவத்தினரை வழிநடத்தும் இராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி நிலை உயர்வு வழங்கப்படும்.
ஆனால் பீல்ட் மார்ஷல் பதவி வழங்குமாறு தொடர்ந்து என்னிடம் சரத் பொன்சேகா மன்றாடினார். பலவந்தமான முறையில் பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக் கொண்டார்.
முதலில் பாராளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்பதை சரத் பொன்சேகா கற்றுக்கொள்ள வேண்டும்,பேச்சு மொழிநடை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.