ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றேன் – சீன பெண் வீடியோவில் தகவல்!!
ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டமைக்காக சீனாவில் பொலிஸார் தன்னையும் தனது நண்பிகளையும் இரகசிய இடத்தில் தடுத்துவைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெகிங் யுனிவெர்சிட்டி பிரசின் ஆசிரியரான 26 வயது காவோ ஜிசின் இந்த தகவலை தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதம் உரும்கி தீவிபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வில் தான் கலந்துகொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பூஜ்ஜிய கொள்கை காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டது அவ்வேளை மக்கள் கருதியதுடன் இதனை தொடர்ந்து பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதற்கு சில நாட்களில் பின்னர் சீன பொலிஸார் தங்களை அழைத்து விசாரணை செய்த பின்னர் 24 மணித்தியாலத்தில்; விடுதலை செய்ததாகவும் எனினும் பின்னர் தங்களை மீண்டும் கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்ட பெண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பல நண்பர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் இந்த வீடியோவை பதிவு செய்தேன் நண்பர் ஒருவரிடம் வீடியோவை வழங்கி நான் கைதுசெய்யப்பட்டால் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் வேளை நான் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருப்பேன் என அவர் வீடியோவில் தெரிவிக்கின்றார்.
வெற்று பிடியாணைகளில் கையெழுத்திடுமாறு பொலிஸார் எங்களை கேட்டுக்கொண்டனர் குற்றச்சாட்டுகள் எவற்றையும் அதில் அவர்கள் தெரிவிக்கவில்லை அடையாளம் தெரியாதபகுதியில் எங்களை தடுத்துவைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.