மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்த கும்பல்- சமையல் எண்ணெயில் கலந்து மோசடி!!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்குள்ள கால்வாய்களில் ரத்தம் வழிந்து ஓடிய கறைகள் படிந்திருந்தது. மேலும் அப்பகுதியில் மாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்த கும்பல் தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்குள்ள குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர். அங்கு மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கும்பல் மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.