பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா சட்டசபை, இம்ரான் கானின் உத்தரவினால் கலைப்பு!!
பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் சட்டசபை இன்று கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவு காரணமாக இச்சட்டசபை கலைப்பு நடந்துள்ளது.
கைபர் பக்துன்கவா சட்டசபையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் _ இன்சாப் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருந்தது. இம்மாகாண சட்ட சபையை கலைக்கக் கோருமாறு இம்ரான் கான் உத்தரவிட்டதையடுத்து, அவரின் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர். சட்ட சபையை கலைக்குமாறு ஆளுநரிடம் கோரினார். அதையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கைபர் பக்துன்கவா சட்டசபையை கலைக்கும் ஆவணத்தில் மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.
பிரிஐ கட்சியின் வசமிருந்த பஞ்சாப் மாகாண சபையும் கடந்த வாரம் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்துவதற்காக இம்மாகாண சட்டசபைகளை இம்ரான் கான் கலைக்கச் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வழக்கமாக, பாகிஸ்தானின் பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் ஒரு வேளையில் தேர்தல் நடத்தப்படும். ஆனால், தனித்தனியாக இத்தேர்தல்களை நடத்தவும் அரசியலமைப்பில் அனமதி உள்ளது.