;
Athirady Tamil News

வானில் மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி!!

0

வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.

வானில் தோன்றும் மின்னலை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின் என்பவர் 1752-ம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்திற்கு இடையேயான தொடர்பு பற்றி விளக்கினார்.

இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் மின்னலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முறை லேசர் உதவியுடன் அதனை முயன்று பார்த்து உள்ளனர். இதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்கில் அமைந்த சாண்டிஸ் மலை பகுதியின் உச்சியில் இருந்து மின்னலின் பாதையை மாற்றியமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்பட்ட லேசர் உபகரணம் ஒரு பெரிய கார் அளவுக்கு 3 டன்கள் (1 டன் என்பது ஆயிரம் கிலோ) எடையுடன் உள்ளது.

இந்த லேசர் உபகரணம் மலையின் உச்சியில் 2,500 மீட்டர் உயரத்தில் வானை நோக்கி பார்த்தபடி, 400 அடி உயர ஸ்விஸ்காம் நிறுவனத்தின் தொலைதொடர்பு கோபுரம் மீது வைக்கப்பட்டது.

இதன்பின்பு, மின்னல்களை திசை திருப்புவதற்காக ஒரு வினாடிக்கு ஆயிரம் முறை என்ற அளவில் லேசர் கற்றைகளை ஆராய்ச்சியாளர்கள் பாய்ச்சியுள்ளனர். முதலில், 2 அதிவிரைவு கமராக்களை பயன்படுத்தி 160 அடிக்கும் கூடுதலான மின்னலின் பாதை மாற்றம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் வேறு 3 கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டன.

அதிக ஆற்றல் வாய்ந்த லேசர் கற்றைகளை வளிமண்டலத்தில் பாய்ச்சும்போது, ஒளி கற்றைக்குள் மிக தீவிர ஒளியிழைகள் உருவாகி உள்ளன. இந்த இழைகள், நைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் ஆகிய மூலக்கூறுகளை காற்றில் அயனியாக்கம் செய்துள்ளன. இதன்பின் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்பட்டு, அவை எளிதில் நகர செய்யப்பட்டு உள்ளன.

இந்த அயனியாக்கப்பட்ட காற்று பிளாஸ்மா என அழைக்கப்படுகிறது. அது மின் கடத்தியாக மாறியது என்று பேராசிரியர் ஜீன்-பியர்ரே உல்ப் விளக்கியுள்ளார். 1970-ம் ஆண்டிலேயே ஆய்வக அளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனினும், தற்போது வரை நேரடியாக அது செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இதற்கு முன்பு உயரம் வாய்ந்த கட்டிடங்களின் உச்சியில் மின்னல் தடுப்பானாக உலோக தடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் வயர் ஒன்று இணைக்கப்பட்டு, பூமியுடன் தொடர்பில் இருக்கும்.

இதனால், மின்னல் பாய்ந்து அதன் மின்சாரம் பூமிக்குள் தீங்கு ஏதும் இன்றி சென்று விடும். எனினும், இது ஒரு சிறிய பகுதியை பாதுகாக்கும் அளவில் இருந்தது.

தற்போது, நடந்துள்ள பரிசோதனையின் அடுத்த கட்ட ஆய்வின் பயனாக, மின் நிலையங்கள், விமான நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் ரொக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு பகுதிகளை பாதுகாக்கும் வகையிலான நடைமுறை கண்டறியப்படும் என ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.