நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர், வரி மோசடி வழக்கில் நிரபராதி என தீர்ப்பு!!
நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர் மரியா ரெஸா, வரிமோசடி குற்றச்சாட்டு வழக்கில் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்டமைக்காக, 2021 ஆம் ஆண்டு ரஷ்ய ஊடகவியலளார் திமித்ரி முராதோவுடன் இணைந்து நோபல் சமாதானப் பரிசை வென்றவர் மரியா ரெஸா.
2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பிணைமுறி விற்பனை செய்தபோது, வரிமோசடி செய்ததாக மரியா ரெஸா மீதும் அவரின் இணைய ஊடக நிறுனமான ரெப்ளர் நிறுவனத்தின் மீதும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வரிமோசடி குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடுத்தது.
அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் மரியா ரெஸா நிரபராதி என இன்று (18) தீர்ப்பளித்துள்ளது.
மரியா ரெஸாவுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்தமைக்காக இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள் கூறுகின்றனர்.
இத்தீர்ப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மரியா ரெஸா, இன்று உண்மை வெற்றியீட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.