;
Athirady Tamil News

தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை!!

0

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று வரிசைகள் இல்லையென்று சிலர் மகிழ்ச்சியடைகின்றனர். விலைகள் அதிகரித்ததுடன், கூப்பன் முறைகளும் கொண்டு வரப்பட்டன. இதனாலேயே வரிசைகள் இல்லாமல் போயின. ஆனால், மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது என்று கூற முடியாது. வாழ முடியாத நாடே இப்போது காணப்படுகின்றது.

விலைகள், கட்டணங்கள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வரிச்சுமைகள் அதிகரித்துள்ளதுடன், வருமான வரி அதிகரிக்கப்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுற்றுலாத்துறை நிறுவனங்களை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது ஜனாதிபதி அரசியல் இலாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றார். அவர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கூறுகின்றார். அனைத்து மாகாண முதலமைச்சர்களும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைப்பதை விரும்புவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளனர். அது முற்றிலும் பொய்யாகும். அவ்வாறு எவரும் அதனை கேட்கவில்லை என்றார்.

இந்த நேரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இவ்வாறான விடயத்தில் பங்களித்து பாவத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று கேட்கின்றோம். 13ஆம் திருத்தம் ஊடாக அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நாடு பொருளாதாரத்தில் முதலில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இல்லாது அதனை நிறைவேற்றினால் நாட்டில் இனவாதம், பிரிவினைவாதம் ஏற்பட்டு மக்களிடையே குழப்பமே ஏற்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.