கொட்டும் உறைபனி- ஊட்டியில் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். குளுகுளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது. இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
அந்த பகுதிகளில் உள்ள பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. மரங்கள், செடிகள், கொடிகளிலும் உறைபனி படர்ந்திருந்தது. இதுதவிர வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது பனிகட்டி உறைந்திருந்தது. இதனை பொதுமக்கள் கையில் எடுத்து ரசித்து பார்த்தனர். ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 23.9 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுவர்ட்டர் அணிந்து கொள்கின்றனர். வேன், ஆட்டோ டிரைவர்கள் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவர்ட்டர், மப்புலர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர், கோத்தகிரி, பர்லியார், கொடநாடு, ஒட்டுப்பட்டறை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.