ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் அழிப்பு- தலைவர்கள் சிலை, பெயர்பலகை மறைப்பு!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை 8-ந் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற 10-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இதனைத்தொடர்ந்து 27-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படம், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை மறைக்கும் பணி தொடங்கிவிட்டன.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயர் போர்டு துணியால் மூடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் இருந்த பல்வேறு கல்வெட்டுகளும் அகற்றப்பட்டும், பேப்பர் கொண்டும் மூடப்பட்டன. அலுவலக வளாகம், கூட்டரங்கம் போன்றவற்றில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வெ.ரா. போன்றோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இது தவிர அரசின் திட்ட விழிப்புணர்வு பேனர்கள் டெண்டர்கள் உள்ளிட்ட விளம்பர நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. கட்டட சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்கள் தலைவர்களின் வாழ்த்து பேனர்கள் அகற்றப்படும் அழித்தும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தலைவர்கள் படங்கள் மாற்றப்பட்டன.
கல்வெட்டுகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் சேர்ந்து கிழக்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈ.வி.என்.சாலை, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை, காவிரி சாலை, ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, கருங்கல்பாளையம் காவிரி சாலை போன்ற இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி மரங்கள், பேனர்களை அகற்ற தொடங்கி உள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ஈரோடு ஜி.எச்.ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி வளாகம் உட்பட அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள், பெயர், படங்கள் அகற்றவும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலக கட்டிடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு அந்த எந்திரங்கள் சரி பார்த்து பழுது இருந்தால் நீக்கம் செய்து தயார் நிலைப்படுத்தப்படும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், அச்சமின்றி நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.