யாழ் விடுதியில் இரகசிய கமரா – கையும் மெய்யுமாக சிக்கிய ஊழியர்!!
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் அறையினுள் தங்கியிருந்தவர்களை நள்ளிரவு நேரம் இரகசியமாக கமராவில் ஒளிப்பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு தென்பகுதியை சேர்ந்த இளைஞனும் வவுனியாவை சேர்ந்த இளம் பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அன்றைய தினம் இரவு 12 மணிக்கு அண்மித்ததாக, வளி சீராக்கி (ac) அருகில் சிறிய துவாரம் ஊடாக கமரா ஒன்று இருப்பதையும் அதன் ஊடக ஒளிப்பதிவு செய்யப்படுவதையும் அறையில் இருந்தவர்கள் அவதானித்துள்ளார்கள்.
உடனடியாக வெளியில் சென்று பார்த்த போது அதே தளத்தில் உள்ள இன்னொரு அறையின் கதவு சடுதியாக மூடப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதியின் ஊழியர்களுக்கு தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரச்சினையால் ஏற்பட்ட தர்க்கத்தை அடுத்து மேற்படி அறையின் கதவை ஊழியர்கள் திறந்த போது அங்கும் விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இருந்துள்ளார்.
அவரது கைத்தொலைபேசியை வாங்கி பார்த்தபோது காணொளி இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அறையில் வாடகைக்கு தங்கி இருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்.
அதற்கு அமைவாக இரகசியமாக காணொளி பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை விடுதியில் விடுதி அறையினுள் கண்ணாடி வைக்கப்பட்டு அது திரைச்சீலையால் மறைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதன் ஊடாகவும் ஒளிப்பதிவு செய்யக்கூடிய நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சோதனையிட்ட போது கண்ணாடியை மறைக்கும் வகையில் வர்ணப் பூச்சு பூசப்படுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேற்படி விடுதியில் தம்பதியினராக செல்பவர்களுக்கு ஒரு சில அறைகள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் நீண்ட நாட்களாக இவ்வாறு ஒளிப்பதிவு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.