பார்வையாளர்களை வியக்க வைக்கும் நவீன கால சர்க்கஸ்: புதிய தொழில்நுட்பத்துடன் மேடை நாடக சாகச நிகழ்ச்சி..!!!
லண்டனில் நடைபெற்று வரும் நவீன கால சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலைஞர்களின் சாகசங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறது. கெனடாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது சர்க்யூ டு சோலைல் என்ற மேடை நாடக மற்றும் சர்க்கஸ் குழு. இந்த குழுவின் பெயருக்கு பிரென்ச் மொழியில் சூரியனின் சர்க்கஸ் என்று பொருள் 1984ம் ஆண்டு இந்த குழு தொடங்கபட்ட நிலையில் 2014ம் ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பங்களுடன் மேடை சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஜனவரி 13ம் தேதி முதல் லண்டன் நகரத்தில் உள்ள ராயல் அல்வெர்ட் ஹாலில் இந்த குழுவின் சாகச நாடக நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. குரியோஸ் தி கேபினெட் ஆப் கியூரியாசிட்டிஸ் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சாகசங்கள், ஆடல், பாடல் என கலவையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விஞ்ஞானி ஒருவர் அனைத்து அறிவியல் விதிகளை மீறிய புதிய உலகங்களை கண்டு பிடிப்பதும் அதனால் நடக்கும் பின் விளைவுகளும், சாகசங்களின் பின்னணியில் இந்த நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.
இதனை காண திரைப்பிரபலங்கள், விளையாட்டு மற்றும் இசை துறையை சேர்ந்தவர்கள் பலர் வித விதமான ஆடைகள் அணிந்து வருகின்றனர். இந்த சாகச குழுவில் சுமார் 5000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சர்வதேச அளவில் மிக பெரிய பொருட்செலவில் நடைபெறும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கொரோனா காரணமாக இவர்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் தற்போது நடந்துவரும் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு ரூ.6000 முதல் ரூ.30,000 வரை ஒரு நபருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மார்ச் 5ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.