டெல்லியில் மகளிர் ஆணைய தலைவியிடம் போதையில் அத்துமீறிய கார் டிரைவர்!!
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் இன்று அதிகாலை அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு கூறி உள்ளார். அவரது நிலை மற்றும் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட ஸ்வாதி மாலிவால் காரில் ஏற மறுத்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர், ஸ்வாதி அருகே காரை நிறுத்தி மீண்டும் அழைத்துள்ளார். இதனால் அந்த நபரை பிடிப்பதற்காக காரின் ஜன்னல் வழியே கையை விட்டுள்ளார். சுதாரித்த அந்த நபர், கார் கண்ணாடியை ஏற்றி உள்ளார். இதனால் ஸ்வாதி மாலிவாலின் கை சிக்கிக்கொண்டது. அப்படியே காரை ஓட்டிய நபர், சுமார் 15 மீட்டர் தூரம் ஸ்வாதி மாலிவாலை இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சந்திரா (வயது 47) என்பது தெரியவந்தது. அவரை பிப்ரவரி 2ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த ஸ்வாதி மாலிவால் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. கடவுள்தான் என் உயிரைக் காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்ற பெண்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்’ என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார்.