;
Athirady Tamil News

இதை அரசியலாக்க வேண்டாம்… ஆதரவு தெரிவிக்க வந்த பிருந்தா காரத்தை வெளியேறச் சொன்ன மல்யுத்த வீரர்கள் !!

0

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பிருந்தா காரத், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது, இந்த போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுகூறி அவரை அங்கிருந்து செல்லும்படி கைகூப்பி கேட்டுக்கொண்டனர். “தயவுசெய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம்” என பஜ்ரங் புனியா கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி பேசிய பிருந்தா காரத், “மல்யுத்த வீரர்கள் இங்கு தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். விசாரணை முடிவடையும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.