இன்சூரன்ஸ் பணத்திற்காக வாலிபர் கடத்தி கொலை- அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது!!
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.85 லட்சத்தை இழந்தார். பங்கு சந்தையில் ஏற்பட்ட பணத்தை சரி கட்டவும் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது பெயரில் 25 வெவ்வேறு திட்டங்களில் ரூ 7.40 கோடி இன்சூரன்ஸ் செய்தார். பின்னர் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெறுவதற்காக தன்னைப் போன்று அடையாளம் உள்ள ஒருவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு உறுதுணையாக மனைவி மற்றும் 2 உறவினர்களை சேர்த்துக் கொண்டார். கடந்த 8-ந் தேதி நிஜமாபாத் ரெயில் நிலையத்திற்குச் சென்ற அதிகாரியின் உறவினர்கள் அங்கிருந்த அப்பாவி வாலிபர் ஒருவரை வெங்கடாபூர் புறநகர் பள்ளத்தாக்கிற்கு காரில் கடத்தி வந்தனர்.
அதிகாரியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வாலிபருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தனர். வாலிபருக்கு அதிகாரியின் உடைகளை அணிவித்து காரின் முன் பகுதியில் உட்காரும்படி தெரிவித்தனர். அதற்கு வாலிபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வாலிபரை கட்டை மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வாலிபரை காரின் முன் சீட்டில் உட்கார வைத்து காரின் உள்ளே வெளியே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் எரிந்துபோன காரில் ஆண் பிணம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிஜமா பாத் போலீசார் காரின் அருகே இருந்த ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் அதிகாரியின் அடையாள அட்டை இருந்தது. அடையாள அட்டையில் இருந்த விலாசத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த அதிகாரி மற்றும் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டவும் கடனை அடைக்கவும் தன்னைப் போன்ற ஒருவரை கடத்தி கொலை செய்து எரித்ததாக அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னாடியே போலீசார் விரைவாக துப்பு துலக்கி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.