காதலியை முன்னால் அமர வைத்து நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்றவாறு ‘கட்டிப்புடி சாகசம்’ செய்த காதலன்!!
சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன. அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு.
ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு. ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த ‘நைட் அண்ட் டே’ ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள். ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார்.
இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர். காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.