அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றாமல் புறப்பட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்!!
பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந் தேதி புறப்பட்ட விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றது. அந்த பயணிகள், விமான நிலைய பஸ்சில் சிக்கி கொண்டதால் அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றி கொள்ளாமல் சிங்கப்பூர் விமானம் புறப்பட்டு சென்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன் விமானம் நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கே சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 35 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் விமானம் புறப்பட்டுவிட்டது.
விமானம் முன்னதாக புறப்பட்டு சென்ற தகவலை அறிந்த அந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் விமான நிறுவனத்திடம் முறையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய இயக்குனர் வி.கே.சேக் கூறும்போது, சிங்கப்பூர் விமானம் விட்டு சென்ற அனைத்து பயணிகளும் தங்குவதற்கு வசதி செய்யப்படுவதாக விமான நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது, பயணிகள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த முகவர் நேர மாற்றம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறினார் என்றார். விமான நிறுவன தரப்பினர் கூறும்போது, விமான நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.