சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவழித்து எதற்கு சுதந்திர தினம் ?
சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ? என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பி இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகள் தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். அவ்வாறான நிலையில் சுதந்திர தினம் தேவைதானா ?
முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை கொண்டாடலாம்.
அதேவேளை, உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையில் மார்ச் 20 ம் திகதிக்கு முன்னர் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.
கடந்த வருடம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல் கட்டாயமாக மார்ச் 20 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு கோடிக்கணக்கான பணத்தினை செலவழிக்க இருக்கின்றனர். அதே போல யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்திருக்கின்றார். ஆனால் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயமாகும்.
இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் போலீசாருக்கு வாகனங்களை பெற்றிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் எங்கே கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த நிதியெல்லாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றது ? என்பது எமக்கு சந்தேகமாக உள்ளது. போலீசாருக்கு நவீன ரக வாகனம் தற்போது தேவைதானா?
ஒரு நாட்டில் ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயக முறைப்படி மக்கள் ஒரு புதிய ஆட்சி முறையை உருவாக்குவது மக்களுக்குள்ள ஜனநாயக உரிமை.
அதனை இந்த அரசாங்கம் பிற்போடுமாக இருந்தால் தோல்வியடைந்த அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும்.
குறிப்பாக 100 கோடி ரூபாய் நிதியை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு இயலாமையாக இருந்தால், இந்த அரசாங்கம் ஒரு தோற்ற அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும்.
ஆனால் மக்களின் ஜனநாயக உரிமை ஆன தேர்தலை பிட் போடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”