இலங்கையுடன் நெடுந்தூரம் பயணிக்க விரும்புகிறோம் !!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போதே, இந்தியா ஒரு நம்பகமான அண்டை நாடாகவே இலங்கையுடன் செயற்படுகின்றது, அதேபோல் நம்பகமான பங்குதாரர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்தி நெடுந்தூரம் செல்ல தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேவைப்படும் எந்த நேரத்திலும் நாங்கள் இலங்கைக்கு ஆதரவாக நிற்போம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பயணத்தின் போது கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து விவாதிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.