வாக்னர் கூலிப்படைக்கு சேர்பியாவிலிருந்து ஆட்திரட்டப்பட்டதால் சர்ச்சை!!
ரஷ்ய தனியார் இராணுவக் கூலிப்படையான வாக்னர் குழுவில் இணைந்த சேர்பியர்கள், பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியமை சேர்பியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனில் ரஷ்ய படையினருடன் இணைந்து வாக்னர் குழு எனும் கூலிப்படையும் போரிட்டு வருகிறது.
இந்நிலையில், ஆட்சேர்ப்புகளை ஊக்குவிப்பதற்காக சேர்பிய மொழியிலான வீடியோவை வாக்னர் குழு வெளியிட்டிருந்தது.
ரஷ்யாவுடன் நீண்டகாலமாக சேர்பியா நல்லுறவுகளைக் கொண்டிருந்த போதிலும், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு சேர்பியா முயற்சித்து வருகிறது.
அதேவேளை, ரஷ்யாவுடனான உறவுக்கு சேர்பியா முன்னுரிமை அளித்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது.
மேற்படி வீடியோ வெளியான பின்னர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய சேர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக், ‘இது எமது ஒழுங்குவிதிகளுக்கு முரணானது எனத் தெரிந்திருந்தும், ஏன் வாக்னர் குழுவில் இணைவதற்கு சேர்பியர்களை அழைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரேன் யுத்தத்தில் சேர்பியா நடுநிலையைப் பேணுவதாக சேர்பிய ஜனாதிபதி வூசிக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தான் பல மாதங்களாக உரையாடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டுப் போர்களில் சேர்பியர்கள் பங்குபற்றுவது சட்டவிரோதமாகும்.
2014 ஆம் ஆண்டு உகரேனில் ரஷ்ய படையினருடன் இணைந்து சேர்பியர்கள் சிலர் போரிட்டிருந்தனனர். வெளிநாட்டுப் போர்களில் பங்குபற்றியமைக்காக சேர்பியர்கள் பலர் சேர்பிய நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.