தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது: எஸ்.ஜெய்சங்கர்!!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். எனினும் சி.வி விக்கினேஸ்வரன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதன்போது அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இருக்கின்ற அரசியலமைப்பு விடயங்களை உடனடியாக அமல்படுத்தக் கூறி, அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தும் இன்றுவரை அவை நடைபெறவில்லை, காணி விடுவிப்பு குறித்து தான் உத்தரவுகளை பிறப்பித்ததாக ஜனாதிபதி கூறினாலும், தொடர்ந்தும் காணி அபகரிப்பு நடந்துகொண்டே உள்ளது என்ற விடயங்களை தமிழர் பிரதிநிதிகள் எடுத்துக்கூறியுள்ளனர்.
ஒற்றையாட்சிக்கு வெளியில் செல்லாவிடின் தீர்வு சாத்தியமில்லை என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி எடுத்துக்கூறியுள்ளதுடன், 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தினால் நாம் ஒற்றையாட்சியை ஏற்றதாகிவிடும் என்பதையும் தெரிவித்துள்ளார். அதேபோல் தெற்கின் சிங்கள மக்கள் எமது கருத்துக்களை செவிமடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மனதை மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே கருத்தினை சுமந்திரன் எம்.பியும் முன்வைத்துள்ளார்.
அதனை ஜெய்சங்கர் ஏற்றுக்கொண்ட போதிலும், இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக அமல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது. தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும். அதில் இந்தியா தலையிட முடியாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.