இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் சீன படையினர் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் உரை – விழிப்புடன் இருக்க உத்தரவு!!
இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் படைகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் வீரர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். ஜின்ஜியாங் மாகாண ராணுவ தலைமையின் கீழ் இயங்கும் பகுதியான குன்ஜெராப் எனும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலைப் படையின் தலைமையகத்தில் இருந்தவாறு அவர் நிகழ்த்திய அந்த உரையின்போது, தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் சூழல் எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்தும், தொடர்ச்சியான இந்த மாற்றங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்தும் ராணுவத்தினரிடம் அவர் கேள்வி எழுப்பினார். சீன கடற்படை மற்றும் விமானப்படையினர் மத்தியிலும் உரையாற்றிய ஜி ஜின்பிங், விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.