தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் – சரத் பொன்சேகா!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை ஜனநாயக ரீதியில் புறக்கணிக்க முடியாவிட்டால் போராட்டத்தின் ஊடாக புறக்கணிக்க முடியும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
களனி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போட அரசாங்கம் பல்வேறு குறுக்கு வழிகளை பிரயோகித்து தேர்தலை பிற்போட அவதானம் செலுத்தியுள்ளது.
தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பாக தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த சட்டத்தை கொண்டு தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்ற போதும் ஏதாவதொரு வழிமுறையில் தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் ஊழல் மோசடி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்ல அச்சமடைந்துள்ளார்கள்.தேர்தலுக்கு தயார் என ஊடகங்களில் பெருமிதமாக குறிப்பிடும் பொதுஜன பெரமுன திரைமறைவில் இருந்துக் கொண்டு தேர்தலை பிற்போட ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகிறது.எவ்வாறு மக்கள் மத்தியில் செல்வது என்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பிரதான பிரச்சினையாக உள்ளது.
தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மக்களின் அபிலாசைக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக செயற்படும் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் அழுத்தமான பாடம் புகட்ட வேண்டும்.எதையும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.
ஊழல் அரசியல்வாதிகளை ஜனநாயக ரீதியில் புறக்கணிக்க மக்களுக்கு இடமளிக்காவிட்டால் போராட்டத்தின் ஊடாக மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை புறக்கணிக்க நேரிடும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் போது அது பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.