ஆப்கானிஸ்தானில் கடும்குளிருக்கு 78 போ் பலி!!
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேல் நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 78 போ் பலியானதாக தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷஃபிஹுல்லா ரஹீமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அந்தக் குளிா் தாங்காமல் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும் இறந்துவிட்டதாக அவா் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல மாகாணங்களில் கடும் குளிர் காலநிலை நிலவி வருகின்றன. மத்திய கோரின் பகுதி வார இறுதியில் -33C (-27F)ஆக மிகக் குறைந்த அளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவுகளால் வீதிகள் தடைப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது குளிர்காலம் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் உள்ளது. 38 மில்லியன் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். மேற்கத்திய தடைகள் மற்றும் தலிபான் நிர்வாகத்தின் சர்வதேச தனிமை நிலைமையை மோசமாக்கியுள்ளது.
கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறையைத் தவிர, மனிதாபிமான குழுக்களுடன் பெண்கள் பணியாற்றுவதைத் தடை செய்யும் தலிபான் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்தன. பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பெண்கள் செல்வதையும் தலிபான் தடை செய்துள்ளது.
செவ்வாயன்று, சில உதவி நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.