டாவோஸ் மாநாட்டில் குற்றச்சாட்டு மோடி எங்கள் பங்காளி இல்லை: பாக். பெண் அமைச்சர் விமர்சனம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதிலடி!!
மோடி எங்கள் பங்காளி இல்லை என்று விமர்சனம் செய்த பாகிஸ்தான் பெண் அமைச்சருக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பதிலடி கொடுத்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர், இந்தியா சார்பில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஹினா ரப்பானி கர் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதிக்கான முயற்சியில் ஈடுபட இந்திய பிரதமர் மோடியை ‘‘பங்காளியாக” எங்கள் நாடு காணவில்லை. ஆனால் மன்மோகன் சிங், வாஜ்பாய் ஆகியோரை பங்காளிகளாக கண்டது. மோடி தனது நாட்டுக்கு நல்லவராக இருந்தாலும், நாங்கள் பங்காளியாக காணவில்லை. இந்தியா ஒரு காலத்தில் அனைத்து மதங்களும் இணைந்து வாழ்ந்த தேசமாக இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. பாகிஸ்தானிலும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்கள் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால் தோ்தலில் வெற்றி பெற எல்லை கோட்டை தாண்டி போர்விமானங்கள் பாகிஸ்தான் வந்தன. இவ்வாறு அவா் பேசினார்.
அவருக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பதில் அளித்து கூறியதாவது: நட்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அண்டை நாட்டில் இருந்து வருவதை நான் காண்கிறேன். ஏன் மற்ற அனைத்து அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. வங்காளதேசம், நேபாளம் மற்றும் இலங்கையுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் வளர்ச்சியில் பங்காற்ற இந்தியா தயாராக இருந்தது. ஆனால் பயங்கரவாதம் எங்கு முளைத்தது என்பதை உலகுக்குத் தெரியும். ஒசாமா பின்லேடன் எங்கே இருந்தார்? உலகில் பிரச்னைகளை ஏற்படுத்திய மற்ற பயங்கரவாதிகள் எங்கே?. நீங்கள் கைகுலுக்க விரும்பினால் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். 2014ம் ஆண்டு, பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை அழைத்தார்.
இந்தியாவின் மதச்சார்பற்ற இமேஜ்ஜை பிரதமர் மோடி கெடுத்து விட்டதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியாக உள்ளனர். சிறுபான்மையினருக்கான பல மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நன்மைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லாத நாட்டில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துவது முற்றிலும் பகுத்தறிவற்ற செயல். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியாவில் உள்ள அதே உரிமைகள் இல்லை. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
* மோடி தலைமை முக்கியம்
உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் கிலாஸ் ஸ்வாப் கூறியிருப்பதாவது: ஜி20-யின் இந்திய தலைமையின் கீழ் உலகம் வளர்ச்சி காணும். பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஜி20 கூட்டமைப்புக்கு பிரதமர் ‘மோடி தலைமை ஏற்றிருப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறு கூறினார்.