;
Athirady Tamil News

விஸ்வேஸ்வரய்யா இரும்பாலையை முழுமையாக மூட முடிவு !!

0

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுனில் வி.ஐ.எஸ்.எல். எனப்படும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் தாது உருக்கு ஆலை உள்ளது. இது பழமையான தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட சைல்(இந்திய இரும்பு ஆணையம்) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான முடிவு சைல் நிறுவன செயற்குழுவில் எடுக்கப்பட்டதாக அதன் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் இந்த இரும்பாலையை மூட உள்ளதாக அவர் கூறினார். ஆனால் மீண்டும் இந்த இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று திடீரென இரும்பாலையை முழுமையாக மூட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது தொழிலாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுபற்றி இரும்பாலை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:- இந்த இரும்பாலையில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் இரும்பாலை பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மாநில அரசு 150 எக்டேர் பரப்பளவில் இரும்பு தாதுவை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. ஆனால் மத்திய அரசு இரும்பாலையை புதுப்பிக்க மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து மாநில அரசு இரும்பாலையை புதுப்பிக்கும் பணிக்காக மதிப்பீடு செய்தது.

அதில் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு செலவாகும் என்று தெரியவந்தது. அவ்வளவு நிதியை ஒதுக்க தற்போது மாநில அரசால் முடியாது என்று கைவிரித்துவிட்டது. இதனால் இரும்பாலையை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.