ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!
சென்னையில் இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- கே:- நீங்கள் தற்போது அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவித்துள்ளீர்கள். ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்? ப:- அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, பா.ம.க., த.மா.கா., புரட்சி பாரதம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கூட்டணி சகோதரர்களிடம் நாங்களே சென்று ஆதரவு கேட்போம்.
கே:- ஆனால் கூட்டணி கட்சிகள் இப்போதும் எடப்பாடி பழனிசாமியுடன் தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை யாரும் அணுகினார்களா? ப:- எங்களிடமும் கூட்டணி கட்சியினர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். கே:- உங்கள் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும் 16 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை பா.ஜனதாவினர் சந்தித்து பேச உள்ளனர். ஒருவேளை பா.ஜனதா போட்டியிட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ப:- பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டு அவர்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவித்தால் உறுதியாக ஆதரவளிப்போம். தேசிய கட்சியாக வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்று கருதி ஆதரவு தெரிவிப்போம்.
கே:- இது விட்டுக்கொடுப்பதாக அமையாதா? ப:- ஈரோடு கிழக்கு தொகுதி நாங்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதி அல்ல. மாநில கட்சியான த.மா.கா. தான் அங்கு போட்டியிட்டது. அவர்கள் தற்போது போட்டியிட விரும்பாத சூழலில் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் போட்டியிட விருப்பம் தெரிவிக்க உரிமை உண்டு. அதன் அடிப்படையில் யார் ஆதரவு கேட்டாலும் தலைமை கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் பாரதிய ஜனதா போட்டியிட்டால் உறுதியாக நாங்கள் ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.