;
Athirady Tamil News

இம்மாத இறுதிக்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் ; தவறினால், ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டம் – சிவாஜிலிங்கம் !!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்.

அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வேலன் சுவாமி கைது மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வேலன் சுவாமியை கைதுசெய்தமை காட்டுமிராண்டித்தனம். இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

அவ்வாறு விடுதலை செய்யத் தவறின், ஜனாதிபதிக்கு எதிராக அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம்.

எங்களை எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யலாம். அதற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை. எத்தகைய தடைகள் வந்தாலும், நாங்கள் அவற்றை தகர்த்து, எமது மக்களுக்காக எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்துவோம்.

கடந்த நல்லாட்சிக் காலத்தின்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் நாம் இத்தகைய போராட்டத்தினை மேற்கொண்டபோது சம்பவ இடத்துக்கு ஜனாதிபதி வந்து கலந்துரையாடிச் சென்றதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ் மக்களுக்கான நீண்டகால கோரிக்கைகள் பல இருந்தும், அதனை தீர்த்துவைக்காது வார்த்தை ஜாலங்களால் காலம் கடத்தி வருகின்ற நிலையில், இனியும் நாம் பொறுமை காக்க முடியாது.

இம்மாதம் 31ஆம் திகதி வரைக்கும் ஜனாதிபதிக்கு நாம் கால அவகாசத்தை விதிக்கிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், நாம் ஜனநாயக ரீதியான கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம். குறிப்பாக, ஜனாதிபதி செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தவுள்ளோம். அதிலும், வடக்கு மாகாணத்தில்.

சுதந்திர தின நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு எதிராக மக்களை திரட்டி கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.