”கலவரத்தில் ராணுவத்திற்கு தொடர்பில்லை” – பிரேசில் பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!!
பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் ராணுவத்திற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஜனவரி 8 ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் மற்றம் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடங்களில் நுழைந்து அங்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கலவரத்தில் பிரேசில் ராணுவமும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியதை அடுத்து, பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. “பிரேசில் ராணுவத்திற்கும் கலவரத்திற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். அவ்வாறு இருப்பின் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.” என பிரேசில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜோஸ் தெரிவித்துள்ளார். கலவரம் குறித்து பிரேசில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேசிலியாவின் ( பிரேசில் தலைநகர்) முன்னாள் மாகாண கவர்னர் இபானிஸ் ரோச்சாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.