;
Athirady Tamil News

திருச்செந்தூர் கோவிலில் 5309 மாடுகளை காணவில்லை- அண்ணாமலை குற்றச்சாட்டு!!

0

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:- திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை.

அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம் கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை.

‘வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்’ திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.