;
Athirady Tamil News

இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது. இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ,பன்னீர்செல்வம் அதிரடி காட்டி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் நாங்களே போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்திடும் உரிமை எனக்கே உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோம் என்கிற நல்ல செய்தியை தற்போது உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தற்போது நானே தொடர்கிறேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுக்கு உள்ளன.

இந்த அங்கீகாரத்தை 1½ கோடி தொண்டர்கள் எனக்கு வழங்கி உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு உரிமையும் எங்களுக்கு உள்ளது. கே:- தேர்தலில் போட்டியிட ஏ, பி, பார்மில் நீங்களும் கையெழுத்து போட வேண்டும். அவரும் (ஈ.பி.எஸ்.) கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலை தானே உள்ளது? ப:- இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஏ மற்றும் பி பார்மில் நான் கையெழுத்திடுவேன். அவர் கையெழுத்திடுவாரா? மாட்டாரா? என்பது அவருடைய விருப்பம். கே:- அவர்களும் போட்டியிட்டால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே? ப:- உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக இருந்துகொண்டு இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வராத சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நாங்கள் தான் கலந்துகொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:-உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டு சுயேட்சையாக போட்டியிடக்கூடிய நிலை உருவானதே? ப:- உள்ளாட்சி தேர்தலின் போது தான் ஒருங்கிணைப்பாளராகவும், அவர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தோம். அந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகி ஏ, பி, பார்மில் கையெழுத்திடுவதற்காக என்னிடம் வந்து கேட்டார். நான் அதில் கையெழுத்து போட்டு கொடுத்து அவரிடம் அனுப்பினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதில் கையெழுத்திடவில்லை. அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் கழக தொண்டர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இப்படி இரட்டை இலை சின்னம் முடங்கி இருந்ததற்கு நான் காரணம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் (சுயேட்சையாக) போட்டியிடவும் தயாராக உள்ளோம்.

கே:- இப்போது அது தானே நடக்க வாய்ப்பு உள்ளது? ப:- உங்களுக்கு நன்றாகவே தெரியும். 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமாக ஒருமுகமாகவே நடத்தப்பட்டது. அதில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டோம். இதனை அனைத்து மக்களும் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் நன்கு அறிவார்கள். பொதுக்குழுவை கூட்டுவதற்கு எனது இசைவு தேவை. எனது இசைவு இல்லாமலேயே 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அது சட்டவிரோதமான பொதுக்குழு என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்காகத்தான் தர்மயுத்தத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்.

கே:- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? தற்போது தனித்தனியாக அறிவிப்பு கொடுப்பதன் மூலமாக கட்சியில் மேலும் பிளவு போன்ற நிலைதானே தொடரும்? ப:- எங்களை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவும் 50 ஆண்டு காலம் தொண்டர்களின் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கி உள்ளார்கள். இந்த இயக்கம் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்த இயக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் எப்போதும் நினைக்கிறோம் என்றைக்கும் இப்படித்தான் இருப்போம். இந்த நிமிடம் வரையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை 1½ கோடி தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான்.

கே:- அ.தி.மு.க.வில் நீடிக்கும் இப்பிரச்சினை இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்தாதா? ப:- ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. ஒன்றே முக்கால் வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலிலேயே உள்ளது. எனவே உறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கே:- தற்போதைய சூழலில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான நிலை ஏற்பட்டுவிடாதா? ப:- இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர் செல்வம் காரணமாக இருக்க மாட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கே:- 23-ந்தேதி கூட்டப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? ப:- அந்த கூட்டம் திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும். அதிலும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நல்லதொரு முடிவை எடுப்போம்.

கே:- நீங்களும் போட்டியிட போவதாக கூறுகிறீர்கள்? பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்கிறீர்கள்? உங்கள் முடிவே குழப்பமாக உள்ளதே? ப:-இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கியது யார்? “நாங்கள் அல்ல. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும். இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார்களோ அதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

கே:- நீங்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா? ப:- நாங்கள் தயாராகவே இருக்கிறோம். கே:- ஆனால் அவர்கள் உங்களை சேர்க்க தயாராக இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்களே? ப:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதுதான் இப்போதும் எனது பதிவாகும். கே:- தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் அவர்களிடம் ஏதும் பேசினீர்களா? இல்லை, அவர்கள் ஏதேனும் பேசினார்களா? ப:- இதுவரை யாரும் பேசவில்லை. கே:- வேட்பாளரை எப்போது எப்படி முடிவு செய்வீர்கள்? ப:- அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து மாவட்ட செயலாளர்கள், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்போம்.

கே:- இடைத்தேர்தலை காரணமாக வைத்து பிரிந்துள்ள அணிகளை ஒன்றிணைக்க சூழல் உள்ளதா? ப:- அதுபோன்ற சூழல் இருந்தால் நாங்கள் வரவேற்போம். கே:- அதற்கான முன்னெடுப்பை நீங்கள் எடுப்பீர்களா? ப:- அனைவரும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக அது முடியும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள். கே:- அவர்கள் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தரப்பில் அதுபோன்று வேட்பாளரை நிறுத்தினால் நீங்கள் ஆதரிப்பீர்களா? ப:- நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். கே:- உச்சநீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறீர்களா? ப:- நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

கே:- சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே? ப:- இதற்கு சட்டப் பேரவைத் தலைவர் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின் படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இல்லை என்று அவரே தெளிவுபடுத்திக்கொள்ள சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டுமே உள்ளது என்று அவர் கூறி உள்ளார். சட்டப்பேரவை தலைவரின் சுய உரிமை ஆகும். கே:- தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை எந்த ரெக்கார்டு உள்ளது? ப:- தற்போது வரையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்கிற ரெக்கார்டு தான் உள்ளது.

கே:- எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதே? ப:- தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார். டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். அதில் தான் வாதங்கள், பிரதிவாதங்கள் எல்லாம் முடிவடைந்து தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். கே:- நீங்கள் இப்படி தனித்தனியாக போட்டியிடுவது ஆளும் கட்சிக்குத் தானே சாதகமாக அமையும்? ப:- இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய இடம் இதுவல்ல.

நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்களிடம் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும். கே:- இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்கிற பார்முலா உள்ளதே? ப:- இந்த தேர்தலில் அந்த பார்முலாவை முறியடித்து காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.