ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை!!
ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அது தேரை என்றே நம்பவில்லை.
வழக்கமாக நாம் காணும் கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு மடங்கு பெரியதாக இருக்கிறது. அதேப்போல் சுமார் இரண்டரை கிலோவுக்கும் அதிகமான எடையில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த தேரை இதுவரை உலகில் காணப்பட்ட தேரைகளை விட மிகவும் பெரியதாக கருதப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகளால் தற்போது இந்த தேரை காட்டிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கிறது.
1935ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இந்த தேரைகள் ஆஸ்திரேலியாவிற்குள் கண்டெடுக்கப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டை பொறுத்தவரை தேரைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும் உயிரினமாகவே கருதப்படுகிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி ஆஸ்திரேலியாவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தேரைகள் இருக்கின்றன.
குயின்லாந்து காட்டுப்பகுதியில் வனத்துறை அதிகாரி கைலி கிரே இந்த ராட்சத தேரையை முதன்முதலில் பார்த்தபோது அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை.
ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் பேசிய அவர், ‘இவ்வளவு பெரிய அளவில் இதுவரை நான் தேரைகளை பார்த்ததேயில்லை’ என தெரிவித்தார். கிட்டதட்ட ஒரு கால்பந்து அளவிலான உருவில் அது பெரிதாக காணப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
அதனை உடனடியாக பிடித்த வனத்துறை அதிகரிகள் குழு, அந்த தேரை பெண்ணாக இருக்க வேண்டுமென நம்பினர். அதனை தூக்கி எடை பார்க்க முயற்சி செய்தனர். அது பிரம்மாண்ட எடைக்கொண்டதாக இருக்குமென்று அவர்கள் கருதினாலும் தனது எடையினால் அது உலக சாதனை படைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்வீடன் நாட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த பிரின்சன் என்னும் தேரைதான் தனது எடையினால் கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அதனுடைய மொத்த எடை 2.65 கிலோவாக இருந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய காட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தேரையின் எடை 2.7 கிலோவாக இருக்கிறது.
இதுகுறித்து பேசும் வனத்துறை அதிகாரி கிரே,’இந்த தேரை அதிகளவிலான பூச்சிகளையும், ஊர்வனங்களையும் மற்றும் சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகளையும் தனது உணவாக சாப்பிட்டு வந்திருக்கும்’ என்று கூறுகிறார்.
இந்த தேரை தன்னுடைய வாயில் எவ்வளவு பெரிய இரைகளை எடுத்துக்கொள்ள முடியுமோ தொடர்ந்து அவ்வளாவு பெரிய இரைகளை அது உணவாக எடுத்து வந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று ஆஸ்திரேலிய காடுகளுக்குள் இயற்கையாக வேட்டையாடும் இனங்கள் என எதுவும் இல்லை. இந்த நிலையில் இத்தகைய நச்சு இனங்கள் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களை அழித்து வருவதாக கருதப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் இந்த ராட்சத கேன் தேரை எத்தனை வயதுடையதாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. பொதுவாக தேரைகள் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. எனவே இது நிச்சயம் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தேரையாகத்தான் இருக்கும் என்கிறார் கிரே.
இந்த ராட்சத தேரை தற்போது கருணைக்கொலை செய்யப்பட்டுவிட்டது. ஆஸ்திரிலேயாவின் இதுப்போன்ற உயிரினங்களுக்கு மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைப்படி இந்த தேரையின் உடல் குயின்லாந்து அருங்காட்சியத்திற்கு கொடுக்கப்பட இருக்கிறது.