சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிப்பு- அரசின் மூத்த விஞ்ஞானி தகவல்!!
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது. ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியான தகவல்களை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் ஆ ஜூன்யூ கூறும்போது, நடப்பு சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் நடமாட்டம் தொற்று நோயை பரப்பலாம். சில பகுதிகளில் தொற்று நோய் அதிகரிக்கலாம். ஆனால் 2-வது கொரோனா அலை அடுத்த காலத்தில் வருவதற்கான சாத்தியமில்லை. ஏனென்றால் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 2அல்லது 3 மாதங்களில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பரவல் வருவதற்கான சாத்தியக் கூறுங்கள் தொலைவில் உள்ளன என்றார். இதற்கிடையே ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிபுணர்கள் கூறும் போது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் இறந்தவர்களை தவிர்த்து உள்ளனர். மேலும் பல டாக்டர்கள், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடுவதில்லை என்றனர்.