டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்- வாலிபரை கொன்று 15 துண்டுகளாக வெட்டி குப்பையில் வீசிய ஆட்டோ டிரைவர்!!
புதுடெல்லியை சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சில மாநிலங்களிலும் இதே போன்று சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் டெல்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்தில் மீண்டும் இதே போன்று ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:- காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி(வயது40), ஆட்டோ டிரைவர். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (வயது 23). அக்ஷய் குமார் மீலால் பிரஜாபதியின் மனைவியுடன் பேசி, பழகி வந்துள்ளார். இதனை மீலால் பிரஜாபதி கண்டித்தார். அதன்பிறகும் அக்ஷய் குமார் அடிக்கடி பிரஜாபதியின் மனைவியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் பிரஜாபதி கடும் ஆத்திரம் அடைந்தார்.
இதனால் அவர் அக்ஷய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 19-ந் தேதி பிரஜாபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மகளை டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரஜாபதியின் மனைவி உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்தார். இதற்கிடையே தனது மனைவி ஆஸ்பத்திரியில் மகளுடன் இருப்பதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு அக்ஷய் குமாரை பிரஜாபதி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு அவருக்கு சில குளிர்பானங்களை குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அக்ஷய் குமார் மயங்கி விழுந்ததும் அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 பைகளில் எடுத்து சென்று கோடா புஸ்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளில் வீசி உள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு குப்பைகளை தெரு நாய்கள் கிளறி கொண்டிருந்தது. அப்போது உடல் துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களின் 15 துண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்புலி பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில் தான் பிரஜாபதியின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பிரஜாபதியை கைது செய்தனர்.