நிலாவெளியில் பப்பாளிச் செய்கையில் பாரிய வீழ்ச்சி : வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை !!
நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாளி செய்கையாளர்கள் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் பப்பாளி பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் பப்பாளிப்பழ விற்பனை சரிவடைந்துள்ளது.
முன்பு போல சுற்றுலாப் பயணிகள் பப்பாளிப் பழங்களை கொள்வனவு செய்ய வருவதில்லை. உள்ளூர் வியாபாரிகளினாலும் உரிய விலையில் பழங்கள் வாங்கப்படாததால் பப்பாளிச் செய்கையில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் பப்பாளி செய்கையாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பப்பாளி பயிருக்கு தேவையான யூரியா, எம்.ஓ.பி, டி.எஸ்.பி முதலான பசளைகளும் கிடைப்பதில்லை என்பதோடு அவற்றின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
ஒரு பப்பாளிக் கன்று 125 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அந்த கன்றுகளுக்கு தேவையான பசளை மற்றும் நீர்ப்பாசனத்துக்கும் செலவழிக்க வேண்டியுள்ளது.
பப்பாளி கன்றுகளை செய்கையிடுவதற்கு ஓரிரு லட்சங்கள் செலவழிக்கிறோம். எனினும், செலவுக்கு ஏற்ப வருமானம் கிடைப்பதில்லை.
வருமானம் பெறுவதற்கு எமக்குள்ள தொழில் இது மட்டுமே. இதனால் இதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகிறோம்.
பப்பாளி செய்கையில் வீழ்ச்சி ஏற்படுகிறபோது அரசாங்கம் எமக்கு உதவி செய்யவேண்டும் என்கின்றனர்.