மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை இந்தியா அர்த்தபூர்மானதாக்க வேண்டும் – பேராசிரியர் சர்வேஸ்வரன் கோரிக்கை!!
13ஆவது திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடியான சாத்தியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான அறிவிப்பை விடுத்துள்ள நிலையில்ரூபவ் இந்தியா மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை அர்த்தபூர்வமானதாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை விவகாரங்களுடன் நீண்டகாலமாக தொடர்புகளைக் கொண்டுள்ளவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விடயத்தில் நீண்ட அனுபவம் உள்ளது.
அவ்வாறான நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
முதலாவது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது என்பதாகும். இரண்டாவது, 13ஆவது திருத்தச்சட்டத்தினையே தற்போதைய நிலையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உந்துதலை அளிக்கலாம் என்பதாகும்.
இவ்வாறான நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, ஆளுநர் என்ற தனிநபரினால் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் உள்னன.
அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளது போன்று வெளித் தோற்றப்பாட்டில் இருந்தாலும், பல அதிகாரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ பறிக்கப்பட்டு விட்டன.
ஆகவே அந்த விடயங்கள் பற்றியெல்லாம் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிப்பதாக இருந்தால் முதலில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறான செயற்பாட்டின் ஊடாகவே, மாகாணசபைகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு முடியும். ஆகவே, இந்தியா குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.