தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்படவில்லை – அமைச்சர் விஜயதாஸ!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.தேர்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடவில்லை.
தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்படவில்லை என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு இல்லை.
ஒள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது,பிற்போடுவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும்.தேர்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடவில்லை.சுயாதீனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.
ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல்,மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றம் ஆகிய தேர்தல்களில் வேட்பாளர் ஒருவர் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் போது சிறந்த அரசியல் சூழல் உருவாகும்.தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல்,தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் உருவாக்கப்படவில்லை.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட தரப்பினருக்கு அடிப்படை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு வழக்கிற்கு நட்டஈடு தீர்ப்பு வழங்கியுள்ளது.வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு அமைய நட்டஈடு செலுத்தியாக வேண்டும்.மாற்று வழியேதும் கிடையாது என்றார்.