தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் – 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும், 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தல்!!
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 ‘பிளஸ்’, மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி, தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரம் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பேச்சுவார்த்தையில் இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை தமிழர் தரப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பு விசேடமாக கவனம் செலுத்தவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கையொன்று தமிழ் சிவில் சமூகத்தவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், பி2பி மக்கள் இயக்கம், தமிழ் சிவில் சமூக அமையம் என்பன உள்ளடங்கலாக 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும், தவத்திரு அகத்தியர் அடிகளார், மன்னார் ஆயர் பி.எப்.இம்மானுவல் பெர்ணான்டோ, திருகோணமலை பேராயர் நோயல் இம்மானுவல், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோர் உள்ளடங்கலாக 551 தனிநபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
ஆனால், தமிழர் தரப்பு எவ்வித முன்னாயத்தமோ அல்லது ஏகோபித்த கொள்கை இணக்கமோ இன்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
இன்றளவிலே இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த பல தசாப்த காலமாக இலங்கை அரசாங்கம் ஏனைய தமிழ்த் தேசங்களை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாக கருதி செயற்பட்டதன் விளைவே இதுவாகும்.
இந்த உண்மையை தற்போது வரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை.
இருப்பினும், தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீளலாம் என்ற உண்மையை உணர்ந்ததனாலேயே அரச தரப்பினால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது தமிழர் தரப்பு கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய விடயங்கள் உள்ளன.
அதன்படி, இனவழிப்பை எதிர்கொள்கின்ற தமிழ்த் தேசத்துக்கு எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாதவை, அவர்களின் தேசிய இருப்பு மற்றும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்பாகும்.
எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதத்தை வழங்குவதாகவே அமையவேண்டும்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றை பொறுத்தமட்டில், இதற்கு முன்னதாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இலங்கை அரசு அதற்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது என்பதை நாம் மறக்கக்கூடாது.
அதேபோன்று முதலில் பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடமொன்றை இருதரப்புகளும் ஒன்றிணைந்து தயாரிக்க வேண்டும். இவ்வரைபடம் முக்கிய அடைவுகள், அவற்றுக்கான கால அட்டவணை என்பவற்றை கொண்டிருக்க வேண்டும்.
இப்பேச்சுவார்த்தைகள், இனவழிப்பின் விளைவுகளாக தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுதி அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக, இறுதி அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை பொறுத்தமட்டில், அவை காத்திரமானவையாக அமையவேண்டுமெனில், இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாலான தீர்வை நோக்கியதாக ஆரம்பத்திலிருந்து இருக்கவேண்டும்.
13ஆவது திருத்தம், 13 ‘ப்ளஸ்’, மேலவை என ஒற்றையாட்சி அரசியல் யாப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாது, நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகளை நோக்கிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தைகளின்போது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை தமிழர் தரப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரம் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பேச்சுவார்த்தையில் இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல.
எனவே, அதற்கேற்றவாறு புத்திஜீவிகள் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக்குழுவொன்றை நியமித்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு நடத்தும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக இருக்கவேண்டும்.
தமிழர் தரப்பின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பவர்கள் பேச்சுவார்த்தை பற்றியும், தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுடன் துணிச்சலான, வெளிப்படையான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுத்து, இறுதித்தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக்கொண்டு அவற்றுக்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
அதுமாத்திரமன்றி, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ்த் தரப்பினர் தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களின்போதும் பேச்சுவார்த்தை மற்றும் அதன் அடைவுகள் என்பன தொடர்பில் தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
இப்பேச்சுவார்த்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள், குறிப்பாக, இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வரும் நாடுகள் மத்தியஸ்தம் வகிப்பது சிறந்தது என்றே கருதுகின்றோம்.
ஆனால், அவர்களது மத்தியஸ்தம் தொடர்பான விதிமுறைகள் முன்கூட்டியே உருவாக்கப்பட வேண்டும். மேலும், இந்நாடுகளுடன் உலகிலுள்ள பிரபல்யமான, மனசாட்சியுள்ள, எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கின்ற, நசுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத தனிநபர்களுள் சிலராவது மத்தியஸ்தர்களாகவும், கருத்துரைக்கும் பார்வையாளர்களாகவும் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.