அனைவருடனும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயார் – ஐ.நா அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி !!
மிக மோசமான சவால்கள் புதிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் முன்நோக்கிப் பயணிப்பதற்கான பாதையையும் உருவாக்குகின்றது.
அந்த வகையில் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள புதிய வாய்ப்புக்கள் என்னவென்பதை கண்டறியும் வகையில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்ட அசுஸா குபோட்டா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியாக பொறுப்பேற்றுக்கொண்டிருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை மிக மோசமானதொரு சமூக – பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையிலேயே நான் இப்பதவியை பொறுப்பேற்றிருக்கின்றேன்.
மிக மோசமான சவால்கள் புதிய பாடங்களைக் கற்றுத்தருவதுடன் புதிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
அதுமாத்திரமன்றி, முன்நோக்கிப் பயணிப்பதற்கான பாதையையும் உருவாக்குகின்றது.
அந்த வகையில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புக்கள் என்னவென்பதைக் கண்டறியும் வகையில் நான் உங்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றேன்.
அதேபோன்று நிலைபேறான எதிர்காலத்தை அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்தும் அடையாளம் காண்பதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.