விளக்கம் கோருகிறார் பொலிஸ்மா அதிபர்!!
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸாரினால் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டமை குறித்து விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் அல்லது பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவுக்கு தெரியாமல் பி அறிக்கை தாக்கல் செய்தமை குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் அறிக்கை கோரியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்தவை தடுக்க சட்டமா அதிபர் மேற்கொண்ட முயற்சிகளை கண்டித்து சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
நீதித்துறையில் சட்டமா அதிபரின் தலையீட்டைக் கண்டித்து ஜனவரி 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் குழுவுக்கு எதிராகவே வாழைத்தோட்டம் பொலிஸார் பி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நுவான் போபகே மற்றும் சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தின் விதிகளை மீறி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக வாழைத்தோட்டம் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.