காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்காக காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்முவின் நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. காலை 10.45 மணிக்கு முதல் குண்டு வெடித்தது.
அடுத்த 15 நிமிடங்களில் 2-வது குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்த நர்வால் பகுதியை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் குண்டு வெடிப்பு குறித்து தகவல்களை அதிகாரிகள் கேட்டு அறிந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து துணை நிலை ஆளுனர் உயர்மட்டக் குழுவினருடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஜம்முவில் சட்டம்-ஒழுங்கு குறித்து மறு ஆய்வு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.