காஷ்மீரில் இரட்டை குண்டு வெடிப்பு எதிரொலி- ராகுல் காந்தியின் பாதயாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ‘ஒற்றுமை பயணம்’ பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜம்மு- காஷ்மீரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். குடியரசு தின விழா மற்றும் ராகுல்காந்தி பாத யாத்திரையையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி செல்லும் வழி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் பாத யாத்திரை இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கியது. சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு- பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியில் இருந்து அவர் பாதயாத்திரை சென்றார்.
இதனால் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தேசிய கொடியை கையில் ஏந்தி ராகுல்காந்தி தனது ஆதரவாளர்களுடன், பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் சம்பா மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியை கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கூறும்போது:- ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சி.ஆர்.பி.எப். மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒற்றுமை பயணம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.