பனைமரத்தில் கள் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்- 8 மாவட்ட விவசாயிகள் ஈ.பி.எஸ்யிடம் கோரிக்கை!!
சேலம் நெடுஞ்சாலை நகரில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது. இங்கு நேற்று எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு விவசாய முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்பட 8 மாவட்ட விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சிப்காட்-க்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே தடுப்பணை அமைக்க அ.தி.மு.க ஆட்சியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி பணி நடந்தது.
தற்போது தி.மு.க அரசு 75 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துவிட்டு தடுப்பணை கட்டுவதை கைவிட்டு உள்ளனர். இந்த தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பால் லிட்டர் ரூ.50, எருமைப்பாலுக்கு 60 ரூபாய் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.